கோட்டாபய இடத்தில் நான் இருந்திருந்தால் விளைவு வித்தியாசமாக இருந்திருக்கும்! கெஹலியவின் பகிரங்க அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்சவை தற்போதும் ஒரு நபராக நேசிப்பதாகவும் ஆனால் போராட்ட காலத்தில் அவரது செயற்பாட்டை தான் ஏற்கவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவினால், ஏற்பட்ட சவாலை சமாளிக்க உரிய தீர்மானத்தை எடுக்க முடியாமல் போனமை குறித்து தற்போதும் வருந்துவதாகவும் தான் அவரது இடத்தில் இருந்திருந்தால் அவரை விட வித்தியாசமாக சவாலை கையாண்டிருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஒன்றாக எழுவோம் ” எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16) நாவலப்பிட்டியில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது. கோட்டாபய ராஜபக்சவுக்காக இந்த நாட்டின் பொது மக்கள் திரண்டனர். மேலும் சில வியத்மக உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்தனர்.
65 வருட அரசியலில் சாதிக்க முடியாததை நுகேகொடை மே தினத்தில் அனுரகுமார திஸாநாயக்க மிகத் தெளிவாகக் கூறினார்.
அரசியலமைப்பை தூக்கி எறிவோம், அவை ஆவணங்கள் மட்டுமே, இவ் விடயத்தை நடுப்பாதையில் வைத்து தீர்த்துக்கொள்வோம் என்று அன்றே வாக்குறுதியாக கூறினார்.
கோட்டாபய தொடர்பில் வருந்துகின்றேன்..
அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது. இன்றும் கோட்டாபய ராஜபக்சவை நான் ஒரு நபராக நேசிக்கிறேன். ஆனால் போராட்ட காலத்தில் அவரது செயற்பாட்டை நான் ஏற்கவில்லை.
அவரால் அச்சவால் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்க முடியாதது தொடர்பில் இன்றும் வருந்துகிறேன். நான் அவ் விடத்தில் இருந்திருந்தால் அவரை விட வித்தியாசமாக செய்திருப்பேன். மகிந்தானந்த அளுத்கமகே இருந்திருந்தால் அதற்கு மேலாக இருந்திருக்கும்.
மேலும் இச்சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகும். அரசாங்கங்கத்தை பலவந்தமாக கைப்பற்றுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video