வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
19,300 கோடி ரூபா பெறுமதியான நகைகள் அடகு
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 40 இலட்சம் பேர் 19,300 கோடி ரூபா பெறுமதியான நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அரச வங்கிகளைத் தவிர சில தனியார் வங்கிகள் ஏற்கனவே தங்கள் கடனைத் தீர்க்கக் கோரி வாடிக்கையாளர்களுக்கு இறுதி நோட்டீஸ் (அறிவித்தலை) அனுப்பியுள்ளன.
வங்கி நிலுவைத் தொகையை மீட்பதற்காக தங்கப் பொருட்களை ஏலம் விடுவதற்கான கடைசி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.