நாட்டில் காணப்படும் போலி வைத்தியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
போலி வைத்தியர்களால் மக்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் கடுமையான சுகாதார அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாகவும், அவர்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அண்மையில் தெரிவித்திருந்தது.
வைத்தியர் போல் காட்டிக் கொண்டு அவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுபவர்களுக்கு 3000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாகவும், அவர்கள் தண்டப்பணத்தை செலுத்தி மீண்டும் அதே குற்றத்தைச் செய்வார்கள் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் அபராத தொகையை கணிசமாக அதிகரிக்கவும் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆரம்ப கட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர தொலைபேசி இலக்கம்
எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்படும் எனவும் யுக்திய நடவடிக்கையின் போது இதற்கான தரவு அமைப்பு ஒன்றையும் பொலிஸார் தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகுதிவாய்ந்த அனைத்து வைத்தியர்களும் இலங்கை மருத்துவ சபைக்கு (SLMC), உட்பட்ட செல்லுபடியாகும் பதிவுகளை வைத்திருப்பது கட்டாயமாகும் என குறிப்பிடப்படுகிறது.
இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 35,528 எனவும் தற்போது 1000 மக்களுக்கு 1.2 வைத்தியர்கள் வீதம் இருப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |