க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு! பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகேவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற பரீட்சார்த்திகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும்.
அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 69.07%ஆகக் காணப்பட்டது.
மேலும், இம்முறை கணிதப் பாடத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 71.06%ஆகக் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19.06.2026) இரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.