உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி இந்த ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேவையற்ற மன அழுத்தம்
2025 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் மீது தேவையற்ற மன அழுத்தத்தை திணிக்காமல் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் கட்டமைப்பை அமைக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பரீட்சை திகதிகளை முன்கூட்டியே அறிவிப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரீட்சை திகதிகள் நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை மாற்றியமைக்கும் அதிகாரம் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ சட்டப்படி கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.