நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு
அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரையின் படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 10ஆவது நாடாளுமன்றத்தின் 1ஆவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள 2024.11.12ஆம் திகதி, 2410/02 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில், பொது வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில், சபையின் முதன்மைப் பொறுப்புகள் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாளில் குறிப்பிட்ட இருக்கை ஏற்பாடுகள் ஒதுக்கப்படாது, அவர்கள் விரும்பும் எந்த இருக்கையிலும் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதிவிசேட வர்த்தமானி
சபையில் செங்கோல் வைக்கப்படுவதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, அன்றைய தினம் முதல் அலுவலாக, செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
பின்னர், அரசியலமைப்பின் 64 (1) மற்றும் நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் படி, சபாநாயகர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். அதைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ உறுதிமொழி, அதன்பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலும், துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் ஆகியோர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சபாநாயகராக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நியமிக்கலாம். எவ்வாறாயினும், அந்த பதவிக்கு ஒரு உறுப்பினரை நியமிக்கும் முன்னர், அந்த உறுப்பினர் நியமனத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
சபாநாயகரின் பெயரை முறைப்படி முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த இரண்டு உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பதற்காக, அவரை கரம்பிடித்து அழைத்துச் செல்வது நீண்டகால மரபாக உள்ளது அதன் பின்னரே சபாநாயகர், தமது உத்தியோகபூர்வ உறுதிமொழி அல்லது பதவிப் பிரமாணத்தை பொதுச்செயலாளர் முன் எடுத்துக்கொள்கிறார்.
சபாநாயகர் தெரிவு
புதிதாக பதவியேற்ற சபாநாயகர், தமது இருக்கையில் அமர்வதற்கு முன்னர் சபைக்கு சுருக்கமாக நன்றி தெரிவிப்பது வழக்கமாகும். பின்னர் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் வாழ்த்துக் குறிப்புகள் வழங்கப்படும் இதைத் தொடர்ந்து, மீதமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன் தங்கள் அதிகாரப்பூர்வ உறுதிமொழி அல்லது சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்வார்கள்.
சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்ற நடைமுறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சில நிகழ்வுகள் உள்ளன. சபாநாயகர், துணை சபாநாயகர், குழுக்களின் துணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்றம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் போதே இரகசிய வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
வாக்கெடுப்பின் போது, ஒரு தொடர்ச்சியான ஐந்து நிமிட கோரம் மணி, உறுப்பினர்களை தயார் செய்யும் வகையில் ஒலிக்கப்படும். நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை எழுதி தாளில் கையெழுத்திட வேண்டும். பின்னர் உறுப்பினர்கள் வாக்குச் சீட்டை கவனமாக மடித்து வாக்குப்பெட்டியில் செலுத்துவார்கள்.
வாக்களிக்கும் முறையை தீர்மானிப்பதற்கும், எண்ணிக்கையை நடத்துவதற்கும் அதிகாரம் பொதுச்செயலாளரிடம் மட்டுமே உள்ளது. அவர் நாடாளுமன்ற மேசையில் உள்ள வாக்குகளை கணக்கிடுகிறார். எண்ணப்பட்ட பிறகு, பொதுச்செயலாளர் முடிவை சபையில் அறிவிப்பார். ஒரு வாக்குச் சீட்டில் உறுப்பினரின் கையொப்பம் இல்லாவிட்டால், அது செல்லாத வாக்காக கருதப்படும்.
சபாநாயகர் பதவிக்கு மூன்று உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டு, எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையென்றால், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு, புதிய சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மேலதிக தகவல் சிவாமயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |