யாழில் கரு தலைமையில் ஒரே மேசையில் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைவு
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு ஆயுதம் ஏந்தி சண்டையிடாத நிலையில் முதிர்ச்சி பெற்ற கல்விமான்களினாலே சுதந்திரத்தை பெற்றதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின தலைவரான கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சுபிட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே என்னும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“டீ.எஸ்.சேனநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது முதலாவது தேசிய தினத்தில் மாணவனாக கலந்து கொண்டேன்.
தேசபக்தி
அப்போது நாட்டில் இருந்த தேசபக்தி இன்றும் எனக்கு இருக்கின்ற நிலையில் நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றுபவர்களுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர்களுடன் பயணிக்க நான் தயாராக உள்ளேன்.
இலங்கை அரசியல் அமைப்பிலே மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென விரும்பியவர்களில் நானும் ஒருவனாக இருந்து 17ஆவது திருத்த அரசியலமைப்பில் எனது பங்களிப்பை வழங்கினேன்.
17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணை குழுக்களான பொலிஸ் ஆணைக் குழு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பவற்றை ஏற்படுத்தினோம்.
18 ஆவது திருத்தம்
அதன்பின் வந்த ஆட்சியாளர்களினால் 17 ஆவது திருத்தம் சிதைக்கப்பட 18 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தோம்.
ஆனால் இருபதாவது திருத்தம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை அழிக்கும் நிறைவேற்று அதிகார முறை பலப்படுத்தப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணை குழுக்களின் அதிகார வரம்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.
ஆகவே நாடு தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்படுவதோடு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி :கஜிந்திரன்
முதலாம் இணைப்பு
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்துள்ளனர்.
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரெதிர் அரசியல் தரப்பினர் ஒன்றாக
இணைந்திருந்ததைப் போல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் அவர்கள் ஒன்றாகப்
பயணிக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)