விகாரமகாதேவி பூங்காவிற்குள் நுழைந்துள்ள மர்ம நபர்கள்.. பதற்றத்தில் பிக்குகள்
ஞானசார தேரரை விடுவிக்கக்கோரி விகாரமகாதேவி பூங்காவிற்குள் இடம்பெற்று வரும் போராட்டத்திற்குள் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் சில நபர்கள் உள்நுழைந்துள்ளதாக அங்குள்ள தேரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த குறித்த தேரர், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட, இந்த போராட்டம் ஒரு சுதந்திரப் பேரணி என தெரிவித்தார்.
மேலும், "இங்கு வருகை தந்து தேவையற்ற குழப்பத்தையும் அழிவுகரமான செயல்களையும் ஏற்படுத்திய நபர் குறித்து நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
சுதந்திரப் பேரணி
பேராசிரியர் என தெரிவித்து ஒருவரை அழைத்து வந்து அவர் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இரவு முழுவதும் பிக்குகள் விழித்திருந்த நிலையில், தற்போது எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறுகின்றனர்.
நாட்டின் நீதித்துறையையும் சட்டத்தையும் நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். எமது பிக்குகள் சூழ்நிலையை சுமுகமாக கையாள முயற்சித்ததுடன், பொலிஸ் அதிகாரிகளுக்கும் நிலைமையை மிகவும் கண்ணியமாக விளக்கியுள்ளனர்.
எமது பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, அவரது துறவற ஆடைகளும் பறிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, கண்டியிலிருந்து கொழும்பு வரை இந்த சுதந்திரப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தற்போது விகாரையில் தங்கியுள்ள பிக்குகள் ஒரு சொட்டு நீர் கூட அருந்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இங்கு கூடியுள்ள துறவிகள், எவராலும் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டவர்கள் அல்லர் என்பதை தெளிவுபடுத்துகின்றோம்.
எனினும், சிலர் தங்களுக்குத் தொடர்பில்லாத நபர்களை எவ்வித அனுமதியுமின்றி இங்கு அழைத்து வந்து திட்டமிட்ட வகையில் குழப்பங்களை விளைவிக்கின்றனர்.
எங்களை துன்புறுத்த வேண்டாம்..!
ஜெர்மனியில் மருத்துவம் பயில்வதாகக் கூறும் நபர் ஒருவர் பேராசிரியர் எனக் கூறிக்கொண்டு இங்கு வந்தார். அவரது தோற்றமும் செயற்பாடுகளும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இவ்வாறானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளமையிலிருந்து பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாகப் புரிகிறது. நாங்கள் அமைதியான வழியில் போராடுகிறோம்.
பொலிஸாருடன் மோதலில் ஈடுபடவோ அல்லது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கவோ விரும்பவில்லை. எங்களை துன்புறுத்த வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியே இந்த அமைதிப் பேரணி தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். பொதுமக்கள் பலரும் எமக்கு உணவும் குடிநீரும் வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS