சுந்தரமான தேசத்தை சுடுகாடாக்கிய சூத்திரதாரிகள் - ஸ்ரீநேசன் ஆதங்கம்
இலங்கையை சுடுகாடாகவும், மனிதப் புதைகுழிகளாகவும், வங்குரோத்து நாடாகவும் மாற்றிய சூத்திரதாரிகள் யாவர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15.08.2025) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும், "இனவாத விசத்தாலும், ஊழல் மோசடிகளாலும் இந்த நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. 74 வீதமான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, பேரினவாதத்தை சிங்களத் தலைவர்கள் சொற்களாலும் செயல்களாலும் விதைத்தனர்.
தமிழர்களை எதிரிகளாகவும், வில்லர்களாகவும் சிங்கள மக்களுக்குச் சித்தரித்துக் காட்டிய வண்ணம், தம்மைச் சிங்கள மக்களைக் காக்க வந்த கதாநாயகர்களாகக் காட்டினர்.
இவ்வாறு சிங்கள அரசியல் நாடகம் 76 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிங்கள மக்கள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், கதாநாயகர்களான தலைவர்கள் ஊழல் மோசடிகளைத் தாராளமாகச் செய்து நாட்டைச் சூறையாடினர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
நான்கைந்து தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்கள் பணத்தினை ஆட்சி செய்த பெரும்பாலான தலைமைகள் குவித்துக் கொண்டன. நாடு சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் இலங்கை பொருளாதார நிலையில், மூன்றாவது நிலையில் இருந்தது. கோத்தாவின் ஆட்சிக்காலத்தில் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.
வங்காள தேசத்திடம் கையேந்தும் வங்குரோத்து நாட்டினை ராஜபக்சக்கள் உருவாக்கினர். மொத்தத்தில், இனவாத விசம், பாரபட்சமான ஆட்சி, ஊழல் மோசடிகள் இணைந்து சுந்தரமான நம் தேசத்தை சுடுகாடாக மாற்றியுள்ளது. மண்ணை அகழ்ந்தால் மனித எச்சங்கள் வெளிக்கிளம்பும் புதைகுழிகள் கொண்ட தேசமாக இந்த நாடு ஆக்கப்பட்டுள்ளது.
லீக்குவான்யூ அந்தரமான சிங்கப்பூர் தேசத்தை சுந்தரமான தேசமாக வடித்தெடுத்தார். எமது இனவாத, ஊழல் மோசடித் தலைவர்கள் சுந்தரமான நாட்டினை அந்தரமான புதை குழித் தேசமாக மாற்றியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை நியாயமாகத் தீர்த்தால், சுந்தரமான இலங்கையை அவர்களால் ஆக்க முடியும்”என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




