ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள்!
ரஷ்ய - உக்ரேன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரேன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரஷ்யாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களில் போரை நிறுத்துவது பற்றி மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்திருந்தன.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களில் போரை நிறுத்துவது பற்றி மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்திருந்தன.
ஜீ 20
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், உக்ரேன் போரை நிறுத்த வேண்டும் என்பதை ரஷ்யாவுக்குப் புரியவைக்க இந்தியா இந்த மாநாட்டைப் பயன்படுத்தும் என்று நம்பியிருந்ததாகக் கூறினார் என்று பாகிஸ்தான் டுடே ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜீ இருபதுக்குத் தலைமை தாங்கும் இந்தியா, வொஷிங்டனின் கவனத்தை எப்போதும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினையின் அறிகுறி தென்படும்போது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஊதிப் பெருப்பித்து இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பிளவுகளை உருவாக்க முற்படுவதாகவும் சீனாவின் குளோபல் ரைம்ஸ் செய்தி இணையம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜீ இருபது மாநாடு தொடர்பாகப் பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் கணிப்பின் பிரகாரம், உக்ரேன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரஷ்யாவுடன் பேசியிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.
அத்துடன் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுத ரீதியான உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கவுள்ளதாகக் கருதப்படும் திட்டத்தைக் கைவிட்டு ரஷ்யாவுடன் பேசி போரை நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்களையும் அதிகமாகக் காண முடிந்தது. அதேநேரம் சீன, ரஷ்ய ஊடகங்கள், உக்ரேன் மீதான போருக்கு அமெரிக்க மேற்குலகமும், ஐரோப்பிய நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜீ இருபது மாநாட்டில்கூட போரை நிறுத்த வேண்டுமென ரஷ்யாவையும் சீனாவையும் வற்புறுத்தியிருந்ததாகவும், இந்தியா தலைமைக் கதிரையில் அமர்ந்திருந்து சுழலுவதாகவும் சீன ஊடகங்கள் கண்டித்து விமர்சித்துள்ளன. இந்த நிலையிலேதான் உக்ரேன் போரை நிறுத்துவது குறித்த ஏற்பாட்டுக்காக ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
பெல்ஜியம் - சீனா
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சமாதான முயற்சியைச் சீனா மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகர், மிகையீலோ பொடோலியக் சமூகவலைத்தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார். சர்வதேச போர் விதிகளை மீறிப் போரை நடத்தி வரும் ரஷ்யாவைக் காப்பாற்றச் சீனா முற்படுவதாகவும் அவர் தனது பதிவில் குற்றம் சுமத்தியுள்ளார்.
பெல்ஜியம் ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்குப் பயணம் செய்திருந்தபோது ரஷ்ய - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் சீனா ஈடுபட வேண்டும் என்ற தொனியில் கருத்தை வெளியிட்டிருந்தார். சீனாவும் அதற்கு உடன்பட்டிருந்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதேநேரம், இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென ஜீ இருபது மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் உக்ரேன் ஜனாதிபதி கேட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இந்திய அரசு அதற்குப் பதில் வழங்காத நிலையில்தான் மாநாடு நடைபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி இருபத்து நான்காம் திகதி ரஷ்ய- உக்ரேன் போர் ஆரம்பித்து ஒரு வருடமாகியுள்ளது.
போரில் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்பது இதுவரையும் தெளிவாகக் கூறமுடியாத நிலையில், இப் போரினால் சர்வதேச நாடுகள் பல முரண்பாடுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துள்ளன. ரஷ்ய - இந்திய உறவு தொடர்ந்து நீடிப்பதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முடிந்தவரை இந்தியாவைத் தம் பக்கத்திற்கு ஈர்க்க, பாகிஸ்தானுடன் உறவைப் பேணி அந்த நாட்டின் முப்படைகளையும் பலப்படுத்தும் திட்டங்களையும் அமெரிக்கா இன்றுவரை செயற்படுத்தி வருகின்றது.
13ஆவது திருத்தச் சட்டம்
இவ்வாறு இந்திய எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் - பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திச் சிறிய நாடான இலங்கையும், இந்தியாவைக் கடந்து அமெரிக்க - சீன அரசுகளுடன் நேரடி உறவைப் பேணும் இராஜதந்திர உத்திகளைக் கையாண்டு வருகின்றது. ஈழத் தமிழர்கள் கோரும் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு மாறாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்று இந்தியா இலங்கைக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.
ஆனால், இலங்கை ஒற்றையாட்சிக்குள் இருக்கும் பதின்மூன்றைக் கூடப் புறந்தள்ளி, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இரத்துச் செய்து இந்தியத் தலையீட்டை முற்றாக விலக்கும் நோக்கில் அமெரிக்க - இந்திய பனிப்போரை இலங்கை நன்கு பயன்படுத்தி வருகின்றமை பட்டவர்த்தனம்.
குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கம் செய்தால் இந்தியத் தலையீட்டைத் தவிர்க்கலாம் என்று பேராசிரியர் றொகான் குணரட்ன தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றார். இந்த நிலையில், ரஷ்ய உக்ரேன் போரினால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகி இராஜதந்திர ரீதியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை, எப்படி வெட்டிக் காய் நகர்த்தலாம் என்ற தீவிர பரிசீலனையில் கொழும்பு ஈடுபடுகின்றது.
குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் மற்றும் பதின்மூன்று பற்றிய இந்தியாவின் அழுத்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, புவிசார் அரசியல், பொருளாதார சூழலுக்கு ஏற்ப, அமெரிக்க - இந்திய அரசுகளுடன் உறவைப் பேணும் உத்திகளில் புதுடில்லியில் இலங்கைத் தூதுவராகவுள்ள மிலிந்த மொறகொட ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
ஜீ இருபது மாநாட்டில் கலந்துகொள்ள டில்லிக்குச் சென்றிருந்த மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளின் உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகளை மலிந்த மொறகொட அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து உரையாடிய தகவல்கள் மெதுவாகக் கசிந்திருக்கின்றன. உக்ரேன் போரின் பின்னரான தனது வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் பெரும் சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது.
இந்தியா
பிரதானமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று கூறிக்கொள்ளும் இந்தியா, ஜனநாயக நாடான உக்ரேன் மீது தனது நட்பு நாடான ரஷ்யா நடத்தும் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்திய வெளியுறவுக் கொள்கை பெரும் சவாலுக்கு உட்பட்டிருக்கின்றது.
ஏனெனில் உக்ரேன் தாக்குதல்களை மேற்குலகின் ஜனநாயக நாடுகள் வெளிப்படையாகக் கண்டிக்கின்றன. உக்ரேனுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றன. ஆனால், உலகின் மிக் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் உக்ரேன் மீதான இரசியத் தாக்குதலை இந்தியா இதுவரை கண்டிக்கவேயில்லை.
மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ள சர்வதேசம், உக்ரேன் மீதான தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை என்பதை ஜனநாயக வஞ்சகமாகவே நோக்குகின்றன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதில் சொல்ல முடியாத அநீதிகளை ரஷ்யா செய்திருக்கிறது. அதேநேரம் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பல தடைகளை விதித்துள்ளன.
ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று கருதப்படுகின்ற இந்தியா, உக்ரேன் போர் விவகாரத்தில் இரட்டைக் கொள்கையைப் பின்பற்றி, ஜனநாயக விழுமியத்தை இரண்டாக்கியுள்ளது என்றே பொருள்கொள்ள முடியும். உக்ரேன் மீதான போர் தற்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று கூறினாலும், ரஷ்யாவின் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதன் காரணமாக ரஷ்யா மீதான பழைய பகைமைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்கு ஒத்துழைப்பதால், இப் போர் நீடிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
சர்வதேச ஊடகங்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனுக்குச் சென்று வந்த பின்னர் போர் மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்றும், போரை நிறுத்த மேற்குலக நாடுகளுக்கு விருப்பமில்லை எனவும் புடின் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகிறார்.
மேற்கு நாடுகள் முதுகில் குத்தியதால் அமைதியாகத் தீர்வுகாண முடியாத சூழலில் போர் தொடர்வதாக புடின் கவலைப்பட்டுள்ளார். புடினின் இக் கருத்துக்கு ரஷ்ய டுடே ஆங்கில நாளிதழ் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகச் சில சர்வதேச ஊடகங்கள் மேற்கோள் காண்பித்துள்ளன.
ரஷ்ய ஊடகங்களின் வருமானத்தைக் கூகுள் நிறுவனம் தடுத்துள்ளமை மற்றும் கூகுளில் ரஷ்யாவின் காட்சி ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளமை ஊடக ஜனநாயகத்துக்கு மாறானது என்றும் ரஷ்ய டுடே கண்டித்திருக்கின்றது.
ஜோ பைடனின் உக்ரேன் பயணம், ரஷ்ய - சீனா உறவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே சீனாவின் குளோபள் ரைம்ஸ் வர்ணித்துள்ளது. உக்ரேன் போர் முடிவுக்கு வராமல், உக்ரேனுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும் ரஷ்யா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் மற்றொரு அணியிலும் நின்று தாக்கத் தொடங்கினால், அது உலகப்போரை நோக்கித்தான் செல்லும் என்ற எச்சரிக்கையைச் சீன ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகக் குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கோதுமை, சோளம், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்திருக்கின்றன. ஆகவே, ரஷ்ய - உக்ரேன் போரால் உலக அளவில் நூற்று எழுபது கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரேன் - ரஷ்யா போர்
ஆனால், உலகில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதை குர்திஸ்தான் மக்களின் தேச விடுதலைக்கு மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் இழைக்கும் அநீதிகளும், பலஸ்தீன மக்களின் அரசியல் விடுதலையை நிராகரித்து, இஸ்ரேல் அரசின் பக்கம் நின்று சொல்லப்படும் நீதிக்கு மாறான நியாயப்படுத்தல்களும் பகிரங்கப்படுத்துகின்றன.
அதேநேரம், இலங்கை ஒற்றையாட்சிக்குள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டைக் கரைப்பதற்கு 2009இல் சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்ட சர்வதேச நியமங்களுக்கு மாறான போர் உத்திக்கு ஒத்துழைத்த மேற்குலகமும் ஐரோப்பாவும், இன்று உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்த இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கொடுக்கும் அழுத்தம் எந்த மனித நேயத்தை மையமாகக் கொண்டது என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
அதேநேரம் இந்தியாவின் மௌனம் ஜனநாயகத்தில் எந்தப் பக்கமாக இருக்கிறது என்ற கேள்விகளும் இல்லாமலில்லை. மேற்குலகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீதான சீனாவின் குற்றச்சாட்டு நேர்மையான அரசியல் நோக்கம் கொண்டதா என்ற வினாக்களும் நியாயமானது. தமிழர்களின் அரசியல் போராட்டத்தை முற்றாக இல்லாமல் செய்யும் போரின்போது, இந்தியா - சீனா மற்றும் மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் வெளியிட்ட ஒப்பாசாரக் கண்ட அறிக்கைகளுக்கும், உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் போரைக் கண்டித்து வெளியிடும் கருத்துக்களும் இடையே வேறுபாடுகள் இருப்பதையும் ஆய்வாளர்களினால் அவதானிக்க முடிகின்றது.
அரசுக்கு அரசு அணுகுமுறை என்ற வாதம் ஒன்று உண்டு. ஆனால் மனிதாபிமானம், அதற்கான சர்வதேசச் சட்டங்கள், தேசிய இனங்களின் அரசியல் விடுதலை பற்றிய நியமங்கள் - கோட்பாடுகள் என்பது அனைத்துச் சமூகத்துக்குமான சமநிலைத் தன்மை கொண்டது என்பதே அரசறிவியல் விளக்கம்.
ஆனால், ஒரு அரசு இழைக்கின்ற அநீதிகளை வேறுபல அரசுகள் கூட்டுச் சேர்ந்து நியாயப்படுத்தும் அரசியல் உத்திகளும், தமக்குத் தேவையற்ற புவிசார் விவகாரங்களைத் தவிர்த்து, அதனைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து விடுதலை கோரிப் போராடுகின்ற தேசிய இனங்களை ஓரங்கட்டும் வியூகங்களுமே உலகில் இன்று விஞ்சிக் காணப்படுகின்றன.
அரசியல் அறத்துக்கு மாறாக இவ்வாறு விஞ்சிக் காணப்படும் வியூகங்களினால் ஏற்பட்ட வலிகள், தோல்விகள் போன்ற உணர்வுகளைப் புரிந்துகொண்ட மன நிலை, ஜீ இருபது மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் பேச்சிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அவ்வாறு புரிந்து கொண்டாலும் ஒவ்வொரு அரசுகளும் தத்தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கிலிருந்து சிறு துளியேனும் விட்டுக் கொடுக்காத பிடிவாதம் மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நெருக்கடிக்கான உரியத் தீர்வுகள் இன்றியே மாநாடு முடிவடைந்துள்ளது.
ஆனால் ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனியர்களையும் குர்திஸ்தானிகளையும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள், இணக்க அரசியல் அவசியமானது என்று மாத்திரம் இந்த வல்லரசுகள் போதனை செய்வதுதான் வேடிக்கை.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
