பாலித நானும் விரைவில் வருகிறேன்: யமனிடம் கூறு - மேர்வின் உருக்கம்
''மச்சான் பாலித தெவரப்பெரும, என்னைத் தனியாகத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய். மேர்வின் சில்வாவையும் உன்னிடம் அழைத்து வருமாறு யமனிடம் கூறு. நானும் விரைவில் வருகின்றேன்" என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அமரர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு உருக்கமாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நானும், பாலித தெவரப்பெருமவும் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே பழகினோம். இந்நிலையில், என்னைத் தனிமைப்படுத்திவிட்டு அவர் சென்றுவிட்டார்.
பாலித என்னை விட்டு சென்றுவிட்டார்
சில திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், மச்சான் பாலித என்னை விட்டு சென்றுவிட்டார்.
உன்னைத் தேடி நானும் விரைவில் வருவேன். அதுவரை காத்திரு. அவ்வாறு காத்திருக்க முடியாவிட்டால், மேர்வின் சில்வாவையும் விரைவில் கொண்டுவந்து தா என யமனிடம் கூறு.
நானும், பாலிதவும் மட்டுமே மரணிப்பதற்கு முன்னரே கல்லறைகளை
அமைத்துக்கொண்டவர்கள். நான் மயானத்தில் அமைத்தேன். பாலித வீட்டுத் தோட்டத்தில்
அமைத்தார்."என்றார்.