பிரான்சில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு - நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
பிரான்சில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
60 சதவீதத்துக்கும் அதிகம் உற்பத்தி சரிவு
குறிப்பாக டோட்டல் எனர்ஜிஸ், எக்ஸான்மொபில் நிறுவன ஊழியர்கள், ஊதியம் வழங்கல் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஊதியத்தை அதிகரித்து வழங்குமாறு ஊழியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தி 60 சதவீதத்துக்கும் அதிகம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்சில் பெரும்பாலான நிலையங்களில் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் தீவிர முயற்சி
இந்நிலையிலேயே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த ஒரு நபர், தன்னை முந்திச்செல்ல இன்னொரு நபர் முயன்றதால், ஆத்திரத்தில் அந்த நபரை கத்தியால் குத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்க வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.