எரிபொருள் விநியோகம் குறித்து மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள அமைச்சர்
மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு குழு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் செயற்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக அளவு
இதேவேளை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கத்தை எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன.
இந்த நிலையில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் சகல வாகனங்களுக்கும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தேவையான எரிபொருள் ஒதுக்கத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.