எரிபொருளை காலதாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை: கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்ப்பாணத்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக இந்த எரிபொருள் விநியோக அட்டையை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பங்கீட்டு அட்டை
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, பொதுமக்கள் தத்தமது தேவைக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டைகளை வதிவிடத்திற்குரிய பிரதேச செயலகங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
அதேவேளை அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது எரிபொருள் பங்கீட்டு விநியோக அட்டையை கடமையாற்றும் திணைக்கள தலைவரின் சிபாரிசுடன் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
காலதாமதமின்றி விநியோகம்
அந்த வகையில் வாகனங்களின் வகைப்படுத்தலின் அடிப்படையில் பிரதேச செயலாளர்களினால் எரிபொருள் நிலையத்தினை குறிப்பிட்டு எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளுக்கமைய எரிபொருள் அட்டைகளை காலதாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.