பாடசாலை மாணவிகளுக்கு இலவசம் - அடுத்த மாதம் முதல் நடைமுறையில்
பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது 10 முதல் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பில் இந்த நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனும், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருடனும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.
நெப்கின்களின் விலை
முன்னதாக, நெப்கின்களின் விலை உயர்வால் பெரும்பாலான மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பாடசாலைக்கு வருவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதனை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெப்கின்களுக்கான இறக்குமதி மூலப்பொருட்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குமாறும், இறக்குமதி செய்யப்பட்ட நெப்கின்களுக்கு வரிச்சலுகை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, நெப்கின்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து முக்கிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நீக்கப்பட்டன.
விலை குறைவு
இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படுவதன் மூலம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பத்து நெப்கின்களின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறையும். அதன்படி, இன்னும் ஒரு மாதத்தில் சுமார் 260 முதல் 270 ரூபாய் வரை கிடைக்கும்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட முடிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலையும் 18 அல்லது 19 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.