நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி: முகாமையாளர் கைது(Video)
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நூற்றுக்கணக்கான லீற்றர் மண்ணெண்ணெய் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
சம்பவம்
தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று (16) மற்றும் இன்று (17) நள்ளிரவு இரு தடவைகள் 6500 லீற்றர் மண்ணெண்ணெய் என சுமார் 13000 லீற்றர் மண்ணெண்ணெய் அதிகாலை மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பின்னர் 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடும்ப அட்டைகளிலும் பதிவுகளை மேற்கொண்டு மண்ணெண்ணெய் பெற சென்றுள்ளனர். இருப்பினும் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ளது.
போராட்டம்
இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்திய போதும் தாங்கியிலும் மண்ணெண்ணெய் இருக்கவில்லை.
இவ்வாறு இருக்க அனுப்பி வைக்கப்பட்ட 13,400 லீற்றர் மண்ணெண்ணெய்க்கு என்ன நடந்தது? என விசாரித்த போது 250 லீற்றர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில் இன்று (17) அதிகாலையிலேயே பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரை கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தானுடையது என்பது குறிப்பிடதக்கது.