வங்கி கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி! பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் வங்கிச் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடியாளர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிவைக்கப்படும் பொதுமக்கள்
குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம், வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகவும், அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகள் அல்லது பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறி பொதுமக்களை தொடர்புகொண்டு குறிவைக்கப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தங்களை வங்கி அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, வங்கிச் கணக்கு விபரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) மற்றும் இரகசியக் குறியீடுகளைப் பெற்றுக்கொண்டு கணக்குகளிலுள்ள பணத்தைச் சூறையாடுகின்றனர்.
அத்துடன், இணையத்தில் பரப்பப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (Links) மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் குறிவைக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறான நிதி மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
உத்தியோகபூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட (Verified) சமூக வலைதளப் பக்கங்களை மட்டுமே நம்புங்கள்.
வங்கி விபரங்கள், அடையாள அட்டை இலக்கம், கடவுச்சொற்கள், OTP இலக்கங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை அறியாத நபர்களுக்கு வழங்க வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை கிளிக் செய்வதையோ அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதையோ தவிர்க்கவும்.
எவருக்காவது பணம் அனுப்பும் முன்னர் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளாகும் பட்சத்தில், உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்ற விசாரணை பிரிவிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவை 011-2852556 அல்லது 075-3994214 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறுபொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பிரதிப் பணிப்பாளர் / நிதி மோசடி விசாரணைப் பிரிவு: 011 - 2300638, தனிப்பட்ட உதவியாளர் / நிதி மோசடி விசாரணைப் பிரிவு: 011 - 238137, நிலயப் பொறுப்பதிகாரி / நிதி மோசடி விசாரணைப் பிரிவு: 011 - 2381058 ஆகிய இலக்கங்களையும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri