திருகோணமலையில் மக்கள் நடமாடும் சேவை
திருகோணமலையில் (Trincomalee) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் மக்கள் நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது, இன்று (08.06.2024) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பயனாளிகளின் வதிவிட பிரதேசங்களில் இலகுவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
இந்நிலையில், பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்லல் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் அனுமதிப் பத்திரம் பெற்ற முகவர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, இந்நடமாடும் சேவையில் தொழிலாளர் திணைக்களம், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு, தொழிற்பயிற்சி அதிகாரசபை உட்பட பல நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கியிருந்தன.
அதேவேளை, நாளைய தினமும் மக்கள் நடமாடும் சேவை திருகோணமலை மக்ஹெய்ஸர் மைதானத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், திகாாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், நாட்டில் தொழிலாளர் சந்தையை புனரமைப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துவதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |