இலங்கையில் உணவு பற்றாக்குறையை தவிர்க்க முடியாது! மீண்டும் எச்சரிக்கும் துறைசார் நிபுணர்
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது என பேராதனை விவசாய பீடத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.
இந்த பருவத்தின் அறுவடையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே விளைச்சல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
பொதுவாக விளைச்சலில் 25 முதல் 30 சதவீதத்தை விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வைத்திருப்பதாகக் கூறிய பேராசிரியர், உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதிக்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்படும் போது மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு உற்பத்திக்கு தேவையான ஒளிச்சேர்க்கை செயல்முறைக்கு முக்கியமான நைட்ரஜன் பற்றாக்குறையால் மரங்கள் மஞ்சள் நிறமாகின்றன. இது உணவு உற்பத்தியைக் குறைத்து விளைச்சலைக் குறைக்கிறது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன.
சரியான ஊட்டச்சத்து இல்லாததால் பயிர் விளைச்சல் 30 முதல் 35 சதவீதம் வரை குறையும் என்று விவசாயப் பொருளாதார நிபுணர்கள் சங்கம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர்கள் இல்லாததால் நிலைமை மோசமாகியுள்ளது.
மறுபுறம், எங்களுக்குத் தெரிந்தவரை, விவசாயிகள் தங்கள் நுகர்வு மற்றும் விதை நெல்லுக்காக ஒவ்வொரு ஆண்டும் மொத்த அறுவடையில் 25 முதல் 30 சதவீதத்தை வைத்துக்கொள்வார்கள். விவசாயத்தை புத்துயிர் பெறுவதற்கு உரங்களை வழங்கி விவசாயத்தை விரைவுபடுத்துவதே இப்போது செய்ய வேண்டிய முதல் காரியமாகும்.
இந்த நிலை உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். நீடித்தால் நாடு பஞ்சத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



