ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி! தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு
இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது.
இது கடற்றொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 208 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல லட்சம் கடற்றொழிலாளர்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக கடற்றொழில் இருந்து வருகிறது.
மீன்வளம்
தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பல லட்சம் கோடி அந்நிய செலாவணியையும், உள்நாட்டு செலாவணையையும் ஈட்டி தரும் மாவட்டமாக இராமநாதபுரம் திகழ்கிறது. பல்வேறு காரணங்களால் கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது.
இதனால் இராமநாதபுரம் மாவட்ட கடற்றொழில் நலிந்து வருகிறது. மேலும் இலங்கை கடற்படையால் கடற்றொழிலாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கேள்விகுறியாகிவருகிறது.
இந்த சூழ்நிலையில் கடல் வளத்தை அழிக்கும் வகையில் பாக் சலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பய்ச்சுவது போல் உள்ளது.
இது கடலை நம்பி வாழும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயல். கடலில் மீத்தேன் கிணறுகள் அமைப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கும் கூட்டங்களில் இராமநாதபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோத செயலாகும். இதை உடனடியாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறுகிய கடல் பகுதியான பாக் சலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை நம்பி இந்திய இலங்கை இருநாட்டுகடற்றொழிலாளர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழக கடற்றொழிலாளர்கள்
இதுபோன்று இயற்கை சூழ்நிலைக்கு எதிரான நாசகார திட்டங்களால் இந்தப் பகுதி கடல் வளம் அழிய வாய்ப்புள்ளது. இதனால் இருநாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
அதேபோன்று UNESCO-வால் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில், இது போன்ற நாசக்கார திட்டங்கள் அமைக்கும் பட்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள அரிதான உயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. எனவே இது மிகப் பெரிய இயற்கை பேரழிவை ஏற்படுத்தும்.
மேலும் கடலில் காற்றாலை, ஹைட்ரோ கார்பன், கனிம சுரங்கம், மீத்தேன் கிணறுகள் அமைப்பது போன்ற நாசக்கார திட்டங்களுக்கு மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு அனுமதியளித்து வருவது, தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மற்றும் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
தமிழக கடலில் இது போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்தால் பல லட்சம் தமிழக கடற்றொழிலாளர்கள் எங்கு சென்று மீன்பிடிப்பது? ஏற்கனவே மீன்பிடிக்க இடம் இல்லாத சூழ்நிலையில் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்து பல்வேறு இன்னல்களை கடற்றொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.
தற்போது இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், கடற்றொழிலாளர்களுக்கு தமிழக கடலில் மீன் பிடிக்க இடம் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் இனமே அழியும் சூழ்நிலை ஏற்படும்.
இது ஒருவகை பொருளாதார ரீதியான மீனவ இனப்படுகொலையாகவே கருதப்படும். எனவே இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ONGC நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 20 ஹட்ரோகார்பன் கிணறுகளுக்கான தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



