கினிகத்தேனை பகுதியில் தொடர் குடியிருப்பில் தீ பரவல்! நான்கு வீடுகள் சேதம் (Video)
கினிகத்தேனை கெனில்வத்த தோட்டத்தில் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்று(21.02.2023) ஏற்பட்ட திடீர் தீயினால் நான்கு வீடுகள் சேதமடைந்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெனிவத்த இலக்கம் ஒன்று தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பில் இன்று காலை 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்ததன்
காரணமாக ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் தீ காரணமாக நான்கு வீடுகளிலிருந்த தளபாடங்கள், அத்தியாவசிய ஆவணங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீயினால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அயலவர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம்
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இது வரை உறுதி செய்யப்படாத போதிலும் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிவதற்காவும் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




