விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் திருவுடல்
புதிய இணைப்பு
வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலின் இறுதி ஊர்வலம் நகர்ந்து வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியிலும் சிறிது நேரம் சாந்தனின் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு
பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பயணித்தது.
பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் வெள்ளங்குளம் இந்து மயானத்தில் புகழுடல் விதைக்கப்படும். இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.
உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலம்
அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு
நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
இதனையடுத்து இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
செய்தி - தீபன்
இரண்டாம் இணைப்பு
சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.
முதலாம் இணைப்பு
சாந்தனின் புகழுடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தற்போது சமய கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சமய கிரியைகளில் வேலன் சுவாமிகள் உட்பட பல சைவ குருமார்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.