பலத்த பாதுகாப்புடன் நிறைவு பெற்ற ஆவணித் திருவிழா - மடு அன்னையின் ஆசிர்வாதத்திற்காக திரண்ட பக்தர்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோரும் திருப்பலியில் இணைந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

