உக்ரைனை சூழ்ந்துள்ள போர் அச்சம்: அமெரிக்க அதிகாரிகள் வெளியேற நடவடிக்கை
உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்பும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில், 1.30 இலட்சம் இராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
அத்துடன் அண்டை நாடான பெலாரசில் தீவிர போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், உக்ரைனின் இருபுறம் உள்ள கடல் பகுதியில் ரஷ்யா தன் போர் கப்பல்களை நிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் உள்ள நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் வெளியேறுமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் குடும்பங்களுடன், அண்டை நாடான போலந்து எல்லைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா மேலும், 3,000 இராணுவத்தினரை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், இவர்கள் ஏற்கனவே போலந்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் 1,700 பேருடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த இரண்டு நாட்களில் கூட போர் ஆரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.