இலங்கைக்கு வந்த FBI அதிகாரிகள்! இரண்டு மோசடி மையங்கள் குறித்து தீவிர விசாரணை
அமெரிக்கப் பிரஜைகளை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் நீதித்திணைக்களத்தின் (DOJ) அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, இணையவழி மோசடிகள் மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு மோசடி மையங்கள்
இதன்போது, அமெரிக்க FBI மற்றும் DOJ அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸின் விசேட விசாரணைப் பிரிவுகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக, கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களும் டிஜிட்டல் ஆதாரங்களுக்காகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது மீட்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்தல், விசாரணை உத்திகளை மீளாய்வு செய்தல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இணையவழியில் மோசடி
இந்த விசாரணைகளின் பிரதான நோக்கம், குறிப்பாக அமெரிக்கப் பிரஜைகளை இலக்குவைத்து இணையவழியில் மோசடிகளில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை முறியடிப்பதாகும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சர்வதேச குற்றவியல் வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்து வருவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, சர்வதேச மோசடிகளில் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான விசாரணைகளை வலுப்படுத்தும் வகையில், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் இலங்கை மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதுடன், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்த ஒத்துழைப்பின் முக்கிய நோக்கம் என அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam