வடக்கு - கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வுகள் (video)
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று (31.03.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம்,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்,வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி: தீபன், கஜிந்தன், ராகேஷ்
திருகோணமலை
இதேவேளை தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம் (31) திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ்.குகதாஷன் தலைமையில் திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாஷன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 125 வது ஜனன தினத்தை கொண்டாடுவதற்காக நாங்கள் இங்கே கூடி இருக்கின்றோம்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் தமிழர் வாழும் எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது. அதே நேரம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் இந்த நினைவு நாளை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1948 டிசம்பர் 18ஆம் தேதி தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார்.
தமிழர்களுடைய வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் எஸ்.சுப்ரா, பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஸ் குமார் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பதுர்தீன் ஷியானா
முல்லைத்தீவு
தமிழ்த்தேசிய தந்தை, ஈழத்து காந்தி என உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் தந்தை செல்வா அவர்களின் 125வது ஜனன தினம் 31.03.2023 அன்று மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றுள்ளது.



