சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதி தொடர்பான அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்
காலாவதித் திகதிகளை நீடிப்பதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, தாங்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டத் தடைகளை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.