மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சித் திட்டம்
சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனையில் ஈடுபடுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாம் கட்ட பயிற்சித் திட்டமானது நேற்று (13) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் தலைமையில் நடைபெற்றது.
மூதூர், கிண்ணியா, குச்சவெளி, வெருகல், பட்டிணமும் சூழலும், மொறவெவ தம்பலகாமம், கோமரன்கடவெல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் இப்பயிற்சியில் பங்குபற்றினர்.
தயாரிப்புகளின் தரம்
இக்கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இந்த தயாரிப்புகளின் தரத்தினை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்போது, போட்டியாளர்களின் விலைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மற்றும் தரமான பொருட்களை குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதன் மூலம் சந்தையில் தங்களை நிலைநிறுத்த உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கம்
அதனைத்தொடர்ந்து மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என்.பிரளாநாவனினால் உற்பத்தி பொருட்களின் கிரயத்தினை எவ்வாறு கணக்கிடுவது என்றும் கிரயத்தினை சரியாக மதிப்பிடுவதன் மூலம் விற்பனை விலை மற்றும் இலாபத்தினை மதிப்பிடுவது தொடர்பாகவும் தனித்தனியாக பிரதேச ரீதியாக கலந்து கொண்ட ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வர்த்தக முத்திரையைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்வது மற்றும் பார் குறியீட்டு (Bar code) அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்தும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
மேலதிகமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு சந்தைப்படுத்தல் உத்திகள் குறிப்பாக சமூக ஊடகங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்தி பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் ஒருங்கிணைப்பாளர் த.பிரணவனால் இந்நிகழ்ச்சி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.







