பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையான சுரேஷ் சாலே
புதிய இணைப்பு
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு வழக்கில், சுரேஷ் சாலேவை மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பெயரிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேவை இன்று 22ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சந்தேகநபரான சுரேஷ் சாலே தற்போது 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார். அதே நேரத்தில் இவ்வழக்கில் உள்ள மற்றைய இரண்டு சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் முன் முன்னிலை
சந்தேகநபரான சுரேஷ் சாலே தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், நீதித்துறை நடவடிக்கைகளுக்காக அவரை திறந்த நீதிமன்றத்தின் முன் முன்னிலைபடுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றத்தின் முன் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.