முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு!

Kamal
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை அவதூறு செய்யும் வகையில் கொழும்பில் சுரொட்டிகளை ஒட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும், திட்டமிட்ட நபராகவும் ஶ்ரீரங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று, குற்ற விசாரணைப் பிரிவிடம் வினவியிருந்தார்.
இதன்போது, ஶ்ரீரங்கா வீட்டில் இல்லை எனவும் தலைமறைவாகியுள்ளதாகவும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஶ்ரீரங்காவை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவரொட்டிகள்
ஶ்ரீரங்கா பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் மேலும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶ்ரீரங்காவின் ஆலோசனைக்கு அமைய மன்னார் நீதிபதியை இழிவுபடுத்தும் வகையில் கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த வழக்கில் சாட்சியாளர்களை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி மைத்திரி குணரட்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியான மைத்திரி குணரட்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரில் நான்கு பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |