இயந்திரமயமான உலகில் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு
இயந்திரமயமான இந்த உலகில் தொழிற்சாலைகளினதும், கைத்தொழில் பேட்டைகளினதும் அதிகரிப்பினால் சுற்றுச்சூழலனானது பல்வேறு வகையான பாதிப்புகளிற்கு உள்ளாகின்றது.
சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை வளங்களானவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன.
எனவே அரிதான அவ்வளங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி நம் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
இயற்கையின் அரும்பெரும் கொடை
இக்கட்டுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் எனப்படுவது எம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பரப்பாகும். இவ் இயற்கையானது காடுகள்,கடல்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளையும் கொண்டமைந்துள்ளது.
மேலும் புதுப்பிக்க முடியா வளங்களாகிய கனிமங்கள், எரிபொருட்கள் போன்றனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த இயற்கைச் சூழலில் பல்வேறுபட்ட உயிரினங்கள், மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்து வருகின்றன.
கணக்கிடமுடியா பேருயிர்களையும், சிற்றுயிர்களையும் தன்னகத்தே கொண்டமைந்த இயற்கையை பேணி பாதுகாத்தால் மட்டுமே பூமியின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்க முடியும்.
நாம் வாழும் சூழலானது ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே நீண்ட காலம் நீடித்து வாழ முடியும். இயற்கையின் அரும்பெரும் கொடைகளை உள்ளடக்கிய சூழலானது பல்வேறுபட்ட காரணிகளால் மாசடைதலிற்கு உட்படுகின்றது.
பல்வேறு மனித நடவடிக்கைகளே பெரும்பாலும் மாசடைதலை ஏற்படுத்துகின்றன.சூழல் மாசடைதலை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என வகைப்படுத்தலாம்.
சட்டவிரோத மண் அகழ்வு
நீரானது தாவரங்களினதும், உயிரினங்களினதும் வாழ்தகமைக்கு மிக அவசியமானது. பூமியின் எழுபத்தைந்து வீதமான பரப்பு நீரினாலே சூழப்பட்டுள்ளது.
இந்த நீரானது தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதாலும், கிருமி நாசினிகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் போது அவை நீரில் கலப்பதாலும் மாசடைகின்றது.
நிலமானது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் குப்பைகளை நிலத்தில் புதைப்பதாலும், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவதாலும் மாசடைதலிற்கு உட்படுகின்றது.
மேலும் அனைத்து உயிர்களின் சுவாசத்திற்கு இன்றியமையாததாக விளங்கும் வளியானது வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையினாலே அதிகளவில் மாசுபடுகின்றது.
இவ்வாறு சுற்றுச்சூழலில் காணப்படும் இயற்கை வளங்களானவை மனித செயற்பாடுகளினால் அழிவிற்கு உள்ளாகின்றன.
அதிகரித்து வரும் மாசடைதலானது தாவர மற்றும் விலங்கு உயிர்ப் பல்வகைமையையும், ஏனைய உயிர்களின் நீடித்ததன்மயையும், மனித இனத்தின் வாழ்தகைமையும் கேள்விக் குறியாக மாற்றியுள்ளது.
மனித நடவடிக்கை
இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் சூழலானது அதன் உயிர்த்தன்மை மாற்றமடையாதவாறு பாதுகாக்கப்படல் வேண்டும்.
சூழல் பாதுகாப்பு எனப்படுவது நிலம், நீர், வளி உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதிக்காதவாறு மனித நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அருகிவருகின்ற புதுபிக்கக் கூடிய வளங்களை மீள உருவாக்குவதையுமே குறிப்பிடுகின்றது. தற்போதைய அவசர உலகில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை அதிகரித்துள்ளது.
இவை சூழலிற்கு மட்டுமின்றி மனிதர்களிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
எனவே இவற்றைத் தவிர்த்து கடதாசி மற்றும் துணிப்பைகளையும், கண்ணாடி மட்பாண்டப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் வேளாண்மை நடவடிக்கைகளின் போது இரசாயன கிருமி நாசனிகள், செயற்கைப் பசளைகள் போன்றவற்றை தவிர்த்து இயற்கை உரங்களையும், பூச்சி நாசினிகளையும் பயன்படுத்த வேண்டும்.
இதனால் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் இரசாயனங்கள் ஏதுமற்று எமக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுத் தரும் மனித நடவடிக்கைகளால் சூழலிற்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக சர்வதேச ரீதியிலும் நாடுகள் அதன் தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளன.
அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து பல்வேறு மாநாடுகள் நடாத்தப்பட்டு, நாடுகளிற்கிடையில் ஒப்பத்தங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன.
ஓசோன் பாதுகாப்பு
அவற்றுள் கியோட்டா உடன்படிக்கை, வியன்னா மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஓசோன் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கை போன்றன முக்கியமானவையாகும்.
அமெரிக்கா, மற்றும் நோர்வே போன்ற நாடுகள் சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குளோரோ புளோரோ காபன், மெதேன் போன்றவற்றின் பயன்பாட்டில் கடுமையான சட்டதிட்டங்களை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 16 இல் சர்வதேச ஓசோன் தினத்தையும், யூலை 28 இல் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையும் மற்றும் மார்ச் 22 இல் உலக நீர் தினத்தையும் அனுஸ்ரித்து வருகின்றன.
அனைத்து உயிர்களினதும் வாழ்விடமாகவுள்ள சூழலை பேணிப்பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
சிறுவயது முதலே சிறுவர்களிற்கு சூழல் பாதுகாப்பின் அவசியத்தை கற்றுத்தருவதோடு, மக்களிடையே சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.சூழலை பாதிக்காத வகையில் எமது செயற்பாடுகளை மேற்கொண்டு இயற்கை வளங்களை பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்போமாக.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |