பிரித்தானியாவில் இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்தி கட்டணம் உயர்வு
பிரித்தானியாவில் இனி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் எரிசக்தி கட்டணம் உயரும் என Ofgem உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகளை நெருக்கடிக்கு தள்ளி வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். இதுவரை மின்சாரம் மற்றும் எரிவாயுக்கு மொத்தமாக ரஷ்யாவை நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது செய்வதறியாது திகைத்துப்போயுள்ளன.
ஜேர்மனிக்கு இதுவரை வழங்கிவந்த எரிவாயு அளவில் பல மடங்கு குறைத்துள்ள ரஷ்யா, மறைமுகமாக மிரட்டி வருகிறது. அத்துடன், டென்மார்க், நெதர்லாந்து உட்பட பல நாடுகளுக்கு எரிவாயு வழங்கலை முடக்கியுள்ளதுடன், தங்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்தால் மட்டுமே எரிவாயு எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது ரஷ்யா.
இருளில் மூழ்கும் ஜேர்மனி நகரங்கள்
ஜேர்மனியில் முக்கிய நகரங்கள் பல எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் இருளில் மூழ்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எரிவாயு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை காரணமாக விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் Ofgem தற்போது எரிசக்தி விலை வரம்பை மதிப்பாய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் விலை வரம்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இனி முதல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை விலை வரம்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
இதனால் 24 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் Ofgem முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26ம் திகதி அறிவிப்பு வெளியாகும்
இந்த அதிக விலை உயர்வு தொடர்பில் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதையும் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய உச்ச விலையில் இருந்து சரிவு ஏற்பட்டால் அதன் பயன் கண்டிப்பாக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபருக்கு பின்னர் சராசரியாக எரிசக்தி கட்டணமானது 3,358 பவுண்டுகளை எட்டும் என்றே தற்போதைய சூழலில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபருக்கு பின்னர் விலை வரம்பு என்னவாக இருக்கும் என்பதை Ofgem ஆகஸ்டு 26ல் அறிவிக்க உள்ளது.
இதனிடையே வெளியான மற்றொரு மதிப்பாய்வில் ஜனவரி 2023ல் எரிசக்தி விலை வரம்பு 3,616 பவுண்டுகள் என உயரக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. இது பிரித்தான குடியிருப்பாளர்களின் எரிசக்தி கட்டணத்தில் இன்னொரு 288 பவுண்டுகளை அதிகரிப்பதாகும்.