சுண்டிக்குளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் : தென்னைகள் நாசம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்தில் யானைகள் இன்று(03.04.2026) அதிகளவான தென்னைகளை நாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த மாதம் வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு வருகை தந்த பல யானைகள் கேவில், கட்டைக்காடு, நித்தியவெட்டை பகுதியில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான தென்னைகளை நாசம் செய்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று(3) சுண்டிக் குளம் பகுதியில் அதிகளவான தென்னைகளை யானைகள் நாசம் செய்துள்ளன. கட்டைக்காடு,கேவில்,நித்தியவெட்டை பகுதியில் யானைகளால் சேதமாக்கப்பட்ட தென்னைகளுக்கான இழப்பீடு அதிகாரிகளால் இதுவரை வழங்கப்படவில்லை.
யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு
குறித்த பகுதி தேசிய பூங்கா எனக் கூறப்பட்டு இழப்பீடு தவிர்க்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேசிய பூங்கா என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை அகற்றுவதற்காகத்தான் இவ்வாறு யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்மையில் யானைகளால் சேதமாக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜுவன் ஜெயச்சந்திரமூர்த்தி விரைவில் யானைகள் வடமராட்சி கிழக்கில் இருந்து விரட்டி அடிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
ஆனால் யானைகள் தொடர்ந்தும் தென்னைகளை நாசம் செய்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.