இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள்
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவதாக தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (01.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார பாதிப்பு
மேலும் தெரிவிக்கையில், பொருளாதார பாதிப்புக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் மனசாட்சியில்லாத வகையில் திணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பினாலும் வாழ்க்கை சுமையினாலும் நடுத்தர குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் வாழ்வதா? அல்லது இறப்பதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியின் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டில் இருப்பதே இல்லை. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.
கடன் பெறுதல், மிகுதியாக உள்ள வளங்களை விற்பனை செய்தல் ஆகியனவே அரசாங்கத்தின் பிரதான பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது. தேசிய வளங்களை பாதுகாப்பதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அரசாங்கத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.
சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கடன் வழங்கலை தாமதப்படுத்தியதை தொடர்ந்து மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தற்போதைய மின் கட்டண அதிகரிப்பால் மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் அதை எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள். மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன். அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக மின்கட்டண அதிகரிப்பு
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய சட்டவிரோதமான முறையில் மூன்றாவது தடவையாகவும் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நான் தடையாக இருந்த காரணத்தினால் தான் என்னை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அரசாங்கம் நீக்கியது.
மின்சார கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிப ந்தனைக்கு அமைய மின்சார கட்டணத்தை மீண்டும் 22 முதல் 25 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை கடந்த மாதம் 28ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்துள்ளது.
ஒரு வருடத்தில் இரண்டு முறை மாத்திரமே மின்கட்டணத்தை அதிகரிக்க முடியும். அதற்கமைய இந்த ஆண்டு இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியாலும், வாழ்க்கை சுமை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்களின் நிலை என்னவாகும் எனபதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் எந்தளவுக்கு சுயாதீனத்துடன் செயற்படும் என்பதும் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |