50 சதவீத மின் கட்டண குறைப்பு: எரிபொருட்கள் விலை குறைப்பு - சம்பிக்க போட்டுடைத்த விடயம்
மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தினபுரியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முறையான வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை அகற்ற முடியும். அதன்படி மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கலாம். அத்துடன் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் குறைக்க முடியும்.
300 சதவீதம் லாபம் ஈட்டும் நிறுவனங்கள்
பொருட்களில் வணிகர்கள் பெறும் அதிகப்படியான லாபம் அகற்றப்பட வேண்டும். சில தொழில் நிறுவனங்கள் 300 சதவீதம் லாபம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, இறக்குமதியாளர் அனைத்து வரிகளையும் சேர்த்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 92 ரூபாவை செலவிடுகிறார். ஆனால் சில்லரை விற்பனை விலை கிலோகிராமிற்கு 700 ரூபாய்க்கு மேல் உள்ளது.
இப்படி அதிக லாபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலையை குறைக்க முடியும். இதற்கு முறையான மற்றும் நிலையான திட்டம் தேவை. அதே சமயம் வீட்டுப் பொருளாதாரமும் வளர்ச்சியடைய வேண்டும்.
செலவுகளைக் குறைத்து வருமானத்தைப் பெருக்குவது அவசியம். அதற்கு முறையான பொருளாதார முகாமைத்துவம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |