இலங்கையில் காலநிலையில் மாற்றம்..! அரபிக்கடலில் கொந்தளிப்பு நிலை - பொதுமக்களுக்கான விசேட அறிவுறுத்தல்
எல் நினோ காலநிலையானது மிகவும் பலமான நிலையை அடைந்துள்ளது என்றும், இந்த மாற்றத்தால் ஒக்டோபர் முதல் 3 மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (19.10.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எல் நினோ காலநிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் எல் நினோ காலநிலையானது மிகவும் பலமான நிலையை அடைந்துள்ளது. இது எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதன் உச்சத்தை அல்லது தீவிரமான நிலையை அடையும். இந்த காலநிலை மாற்றத்தால் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஒக்டோபர் மாத இறுதியில் மற்றும் நவம்பர் மாதத்தில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆண்டின் முதல் காலண்டில் பெப்ரவரி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலநிலை அதிக வெப்பத்துடன் காணப்படும்.

இவ்வாறு மழை பெய்யாத நாட்களில் கடும் வெப்பம் நிலவும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவதானிக்கப்படும் மாற்றங்கள்
அதேவேளை வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அவ்வவ்போது ஏற்படும் மாற்றங்களை வளிமண்டலவியல் திணைக்களம் அவதானித்து வருகிறது. தற்போது அரபிக்கடலில் ஒரு சிறிய கொந்தளிப்பு நிலை காணப்பட்டாலும் அது இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
அது குறித்து அவசர கால சூழ்நிலை அல்லது வானிலை மாற்றம் ஏற்பட்டால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புக்களை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.