ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் இதனால் மக்கள் போராட்டம் நடத்தப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ நிதி வழங்கப்படும் என்றும் கூறினார். எதிர்வரும் கடினமான நாட்களைப் பார்க்கும்போது, எதிர்ப்பு இருக்க வேண்டும்.
மக்கள் பாதிக்கப்படும்போது அது இயற்கையானது, அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த மக்களின் எதிர்ப்பு அரசியல் அமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது.
பொதுமக்களில் பெரும்பாலோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"எங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது நாம் மேலும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சிட வேண்டும்," என்று விக்ரமசிங்க கூறினார். வருடாந்த பணவீக்கம் வரும் மாதங்களில் 40 விகிதத்தை தாண்டும் என்று அவர் எச்சரித்தார்.
இது ஏற்கனவே அதிக விலைகளுடன் போராடும் இலங்கை குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, பணவீக்கம் மார்ச் மாதத்தில் 21.5 விகிதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 33.8 விகிதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.