கிழக்கு மாகாணசபைக்கு 1800 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீடு: கந்தசாமி பிரபு எம்.பி
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணசபைக்கு 1800 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் இருக்கின்ற திணைக்களங்களுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு, தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
புனரமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள்
மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இன்று (03.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த வகையில் கால்நடை திணைக்களங்கள் மற்றும் புதிய ஏனைய செயற்றிட்டங்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 நாட்களைக் கடந்தும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தொடற்சியாக போராடி வருகின்றார்கள்.
பிரச்சினைக்குத் தீர்வு
எமது அரசாங்கம் உருவாகி தற்போது ஒரு வருடம்தான் கடந்திருக்கின்றது. அப்பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவோம் என நாம் கடந்த தேர்தல் காலத்திலும் குறிப்பிட்டிருந்தோம்.
அதற்கான முயற்சிகளை நாம் அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, அம்பாறை, பொலன்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், இணைந்து முதற்கட்ட பேற்றுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அதிலே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 1600 ஹெக்டயர் காணியை முதற்கட்டமாக மேச்சல்தரைக்காக விடுவிப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெகுவிரைவில் பண்ணையாளர்கள் கோருகின்ற 3000 ஏக்கர் மேச்சல் தரைப்பகுதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.



