சுமந்திரனும், சாணக்கியனும் அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றனர்: சிவநேசதுரை சந்திரகாந்தன் (Photos)
கண்முன்னே இடம்பெற்ற அழிவுகளுக்கு நியாயம் கேட்க வேண்டியவர்களே பக்கச்சார்பாக இருந்து அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றமை வேதனையான விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஊரணி சந்தியிலிருந்து திருப்பெருந்துறை வரையில் அமைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கான நடைபாதை மற்றும் பூங்கா என்பனவற்றின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 100 நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக சுமார் 17.5 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை மற்றும் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ளன.
இதனை மக்களின் பாவனைக்கென வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் தான் இந்த நாட்டினை அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்றது. அந்த இழப்புகளை ஏற்படுத்தியவர்களுடன் இணைந்து இன்று சுமந்திரனும் சாணக்கியனும் கையெழுத்துப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே அரசாங்கம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியல் ரீதியான முரண்பாடுகள், கொள்கை பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கான தேவையினை நிறைவேற்றுவதில் பின்னிற்கும் அவசியம் கிடையாது. அந்த அடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் மக்களுக்காக பணியாற்றுவோம்.
இந்த அரசாங்கம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இந்த அரசாங்கம் தோல்வியடையவில்லை, தோல்வியடையப்போவதுமில்லை. பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசாங்கம். இந்த நாடாளுமன்ற காலம் முடியும் வரைக்கும் இந்த அரசாங்கம் பயணிக்கும்.
நல்லாட்சிக்காலத்தில் அதிகளவான வாக்குகளை இந்த மக்கள் மைத்திரிபாலசிறிசேனவுக்கு அளித்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர் சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் குறைந்தளவு வாக்களித்த கோட்டபய ராஜபக்ச பொதுவான வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையானவற்றை சமமாக வழங்கிவருகின்றார்.
நான் சிறையிலிருந்து வருகின்றபோது வாகரை, மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் முற்றுமுழுதாக இல்லாத நிலையே இருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்வித்துறையில் மிக முக்கியமானவராகயிருந்தவரே கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகயிருந்தார். நான் சிறைச்சாலையிலிருந்து வந்ததன் பின்னரே ஆசிரியர்களை கூட நியமித்தோம்.
இன்று 400 கிலோ மீற்றருக்கு அதிகமான வீதிகளை கிராம புறங்களில் அமைத்திருக்கின்றோம். இன்று நாட்டில் பொருளாதார பிரச்சினையேற்பட்டுள்ளது. இது இலங்கைக்கான பிரச்சினை மாத்திரமல்ல.
அது மட்டுமன்றி மட்டக்களப்பில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு. காத்தான்குடியில் ஆரம்பித்த மதப்பயங்கரவாதம் காரணமாகத்தான் அதிகூடிய பாதாளத்திற்கு எமது பொருளாதாரத்தினை இட்டுச்சென்றது.
இந்த குண்டுவெடிப்பு மட்டக்களப்பு நகரிலும் 32மேற்பட்ட உயிர்களை காவுகொண்டதுடன் 100க்கு மேற்பட்ட காயமடைந்தோரையும் ஏற்படுத்தியது.
இதற்கு காரணமாகயிருந்தவர்கள், வவுணதீவில் பொலிஸாரைக் கொன்றவர்கள், கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் நாங்கள் அனுபவித்தபோது அதனை கண்டும் காணாதவர்கள் போலிருந்தவர்கள் இன்று அந்த இழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தியவர்களுடன் இணைந்து சுமந்திரனும் சாணக்கியனும் கையெழுத்து போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் தான் இன்று அரசாங்கம் பல்வேறுபட்ட பணிகளை அரசாங்கம் இங்கு முன்னெடுத்துவருகின்றது.
அரசியலில் போட்டிகள்,பொறாமைகள்,கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அழிவுகளுக்கு நியாயம் கேட்கவேண்டியவர்களே அதனை மறந்து ஒரு பக்கச்சார்பாக, அரசாங்கத்தின் மீது பழியை சுமத்த நினைப்பது வேதனையான விடயமாகும்.
நாங்கள் இந்த மாகாணத்தின் தலைவிதியை அரசியல் ஊடாக மாற்றலாம் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்துள்ளோம். அந்த நம்பிக்கையினை ஏற்றுக்கொண்ட மக்கள் அதனை தக்கவைத்து எங்களுக்கு வாக்களித்துவருகின்றனர் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்சுதர்சினி சிறிகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
