உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் சஹ்ரான் வெளியிட்ட வீடியோவில், இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவருக்காகவும், இஸ்லாமிய அரசு என்ற கொள்கைக்காகவும், நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கவுமே நடத்தப்படுவதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உண்மைகளை மறைத்து, இது ஒரு அரசியல் சதி எனக் கூறுவது உண்மையான தீவிரவாதக் கொள்கையை மீண்டும் வளர்ப்பதற்கு வழிவகுக்கும் என்றும், இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
மேலும் தெரிவிக்கையில், இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த உறவுகளுக்காகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இதுவரையில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 79 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 9 மாவட்டங்களில் 25 வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தாக்குதலுக்குப் பின்னால் ஒரு 'மகா சூத்திரதாரி' இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலின் போது வழங்கிய அந்தப் பொய் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தற்போது திறமையான புலனாய்வு அதிகாரியான சுரேஷ் சலேயைக் கைது செய்து பழிவாங்கும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, 2016 முதல் 2019 டிசம்பர் வரை சுரேஷ் சலே வெளிநாட்டிலேயே தங்கியிருந்த நிலையில், நாட்டில் இல்லாத ஒருவரை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்துவது அநீதியானது எனவும், இது புலம்பெயர் டயஸ்போராவினரைத் திருப்திப்படுத்தச் செய்யும் ஒரு முயற்சி எனவும் அவர் விமர்சித்தார்.
தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதியா?
FBI மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் போன்ற சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்கள் என எவற்றின் அறிக்கைகளிலும் இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருந்ததாகக் கூறப்படவில்லை என்பதை அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.
தாக்குதலுக்கு முன்னர் சஹரான் வெளியிட்ட வீடியோவில், இது ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவருக்காகவும், இஸ்லாமிய அரசு என்ற கொள்கைக்காகவும், நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கவுமே நடத்தப்படுவதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான உண்மைகளை மறைத்து, இது ஒரு அரசியல் சதி எனக் கூறுவது உண்மையான தீவிரவாதக் கொள்கையை மீண்டும் வளர்ப்பதற்கு வழிவகுக்கும் என்றும், இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், போரை வெல்ல உதவிய அதிகாரிகளையும் நபர்களையும் இலக்கு வைப்பதன் மூலம் அரசாங்கம் குறுகிய அரசியல் இலாபம் தேடுவதாகக் குறிப்பிட்டார்.
2017 முதல் பல புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டும், சஹ்ரானுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தாமல், இது ஒரு சதி எனக் கூறுவது வேடிக்கையானது. முறையான சான்றுகள் இன்றி இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கத்தோலிக்க மக்களிடையே தேவையற்ற வெறுப்பை உருவாக்குகிறது என தெரிவித்துள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam