நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்யுமாறு டக்ளஸ் பணிப்புரை
நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் அங்கமான நாரா எனப்படும் தேசிய நீர்யில் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான நிர்வாக அதிகாரிகளை நேற்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்திய கடற்றொழில் அமைச்சர், குறித்த நிறுவனத்தினர் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், அண்மையில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முதலாவது கட்டப் பணிகளுக்கான ஆய்வுப்பணிகளை சிறப்பாக மேற்கொணடு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நாரா அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு தெரிவித்துள்ளார்.
வினைத்திறனான செயற்பாடுகளின் ஊடாகவே நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதுடன் கடற்றொழில் சார் மக்களின் வாழ்கைத் தரத்தினையும் உயர்த்த முடியும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





