அதிகரிக்கும் டொலர் இருப்பு! வரிகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் டொலர் கையிருப்பு தற்போது அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு இன்றிக் கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 மே மாதத்தில் நாட்டில் இருந்த நிலைமையையும் இன்று நாட்டின் நிலைமையையும் பார்க்கும்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது.
இது எல்லா இடங்களிலும் பரிணமிக்கின்றது. டொலர் இருப்பு அதிகரித்திருப்பதுடன், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகின்றன.
அரசாங்கத் துறையில் சம்பள உயர்வு சாத்தியமாகியுள்ளது. எதிர்காலத்தில் வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியம் மட்டுமன்றி, உலக வங்கியும் வெளியிட்ட அறிக்கைகளைப் பார்த்தால் அரசாங்கத்தின் முயற்சிகளின் வெற்றி தெரியும்.
குறுகிய காலத்தில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பது வியப்பளிக்கிறது என அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களின் உதவி கிடைத்த அதேநேரம், நாமும் திட்டமிடல்களை சரியாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.
உலகின் மற்றைய வீழ்ச்சியடைந்த 20 நாடுகளில் குறுகிய காலத்தில் மீட்சிபெற்ற நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிணற்றில் உள்ள தேரைகள் போன்ற இவர்கள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக வேலைசெய்யும் சிலர் மக்களைக் குழப்பி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |