களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் பல்வேறு கோசங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (08.11.2023) இடம்பெற்றுள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு நியாயமான தீர்வு மற்றும் அவர்களை நாட்டில் தக்க வைப்பதற்கான தகுந்த தீர்வை வழங்கல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் கிராமிய வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு விஷேட வைத்திய நிபுணர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறுவதனால், பல விசேட வைத்திய சிகிச்சை பிரிவுகளும் மூடப்படும் அபாயத்திலுள்ளன.
பொருளாதார நெருக்கடி
வைத்தியர்களுக்கு பொருளாதார ரீதியான எந்த ஒரு மேம்பாடும் அரசினால் இதுவரை வழங்கப்படவில்லை என்பதோடு, நியாயமற்ற வரிக் கொள்கையினால் வைத்தியர்களுக்கு மேலும் மேலும் பொருளாதார ரீதியான நெருக்கடி ஏற்படுகிறது.
வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது.
வைத்தியர்களின் தொழில்முறை அபிவிருத்தியை மேலோங்க செய்யும் செயற்திட்டங்கள் இன்னும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் உள்ளன.
மேற்குறிப்பிட்டது போன்ற பல பிரச்சினைகளுக்கு அரசு இதுவரை உரிய மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்காமல் இழுத்தடிப்பதனால் நாட்டில் இலவச சுகாதாரத் துறை பாரிய ஒரு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.