உயர்கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் - வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
கொத்தலாவலை இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பம்பைமடு பகுதியின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
கன்னங்கராவால் முன்மொழியப்பட்ட இலவசக்கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும், பல்கலைக்கழகங்களைத் தனியார் மயப்படுத்தி இராணுவ மயப்படுத்துவதையும் எதிர்த்து. நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
இந்த சட்ட மூலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொத்தலாவ சட்ட மூலத்தினை முறியடிக்க ஒன்றிணைவோம், ஒழுக்கமென்பது கேள்விகேட்காத கீழ்ப்படிவல்ல, கொத்தலாவ இராணுவத்திற்கு? அரச பல்கலைக்கழகம் பொதுமக்கள் கல்விக்கு, இராணுவக்கல்வியும், பொதுமக்கள் கல்வியும் ஒன்றாக்கமுடியாது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.






