வவுனியாவில் விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கி வைப்பு
வவுனியாவில் கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக குளங்கள், கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 29 விசாயிகளுக்கு தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயிர்ச்செய்கைக்கான தானியங்கள் வழங்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆலோசனை வழிகாட்டல்கள்
இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குளங்களின் கீழான பயிர்ச் செய்கைக்காக நிலக்கடலை, கௌப்பி, பயறு, உழுந்து என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழ் உள்ள 25 விவசாயிகளுக்கு விதைக் கச்சானும் இரு விவசாயிகளுக்கு கௌப்பி விதைகளும், ஒரு விவசாயிக்கு உழுந்து விதைகளும் மற்றும் ஒரு விவசாயிக்கு பயறு விதைகளும் என 29 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வின் போது பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வில் கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையப் பொறுப்பதிகாரி, கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.