சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடையும்! சீனா உறுதி
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல் வெற்றியடையும் என எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவும் சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளமையால், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் கூட்டத்தில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என இலங்கைக்கான சீனாவின் தூதுவர் (Qi Zhenhong) கீய் சென்ஹோங் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் இடையில்,பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்
சீனப் பிரதமர் லீ கெகியாங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் தூதுவர் உத்தியோகபூர்வமாக பிரதமரிடம் கையளித்தார்.
இந்த சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் பொருளாதார, விவசாய மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இலங்கைக்கான சீன சுற்றுலாவை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை, பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட ஹம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில்
கைத்தொழில்கள் மற்றும் விவசாயத் துறை தொடர்பான சீனாவின் முதலீட்டு
வாய்ப்புகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.