மூதூரில் அனர்த்த நிலைமை சீரமைப்பு - அமைச்சர் சுனில் ஹந்தும்நெத்தி வழங்கியுள்ள உறுதி
மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்தும் நெத்தி மூதூருக்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளார்.
நேற்று மாலை (டிசம்பர் 2) அமைச்சர் மூதூருக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தினசேகர, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசான் அக்மீமன, மற்றும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜே. எஸ். பி. டபள்யூ. பல்லே கும்பற ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வழங்கியுள்ள உறுதி
மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டம், மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம். எஸ். எப். றோசனா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது,சீரமைப்புப் பணிகளுக்காக, இடைத்தங்கல் முகாம்களுக்கான கழிவறை வசதிகள், எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், அலுவலகத்துக்குத் தேவையான வாகன வசதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து, உதவி செயலாளரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், மூதூர் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நிவாரணப் பணிகள் மற்றும் நிலைமை சீரடைதல் வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது என்றும், அரசாங்கம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சகல வகையான நிவாரண வசதிகளையும் வழங்கிக் கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாடுகள்
மூதூர் பிரதேசத்தில் உள்ள 31 இடைத்தங்கல் முகாம்களுக்கு உள்ளவர்களுக்கு இன்று பகல் சமைத்த உணவு வழங்கப்பட்டிருக்கின்றது
உலர் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் அவை வழங்கப்படும். வீதிப் போக்குவரத்து தடையே எரிபொருள் பிரச்சினைக்குக் காரணம். இன்று பெரும்பாலும் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனர்த்த நிவாரண உதவிகளை வழங்க விருப்பமுள்ளவர்கள், அதனைப் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வைக்கின்ற போது, அது முறையானதொரு ஒழுங்கு திட்டத்தில் அமையும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் உலர் உணவுப்பொருட்களை (அத்தியாவசியப் பொருட்கள்) வழங்குவதே மிக பொருத்தமானதாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

முறையாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் . பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவது சாலப் பொருத்தமானதாக அமையும் என்றும், அவற்றை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கினால், அது உரியவர்களுக்கு உரியவாறு சென்றடைவதோடு, உண்மையான பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
சமைத்த உணவுகளை வழங்க விருப்பம் உள்ளவர்கள், அதனையும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குகின்ற போது, சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
மேலும், வீடுகளில் தங்கி இருப்பவர்களுக்குக் கூட அவ்வாறு வழங்குவது மிகச் சிறப்பானதாக அமையும் என்றும் ஆளுநர் எடுத்துக்கூறியுள்ளார்.
இதேவேளை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மூதூர் பிரதேசம் அரச மக்கள் பிரதிநிதிகள், முப்படையினர், அரச அதிகாரிகள் ஆகியோரின் பூரண பங்களிப்போடு, மறுசீரமைக்கப்பட்டு வருவதாக மூதூர் பிரதேசத்துக்கான உதவி பிரதேச செயலாளர் எம். எஸ். எப். ரொசான தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.