இலங்கையில் மோசமாகும் மருத்துவத்துறை! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் சுகாதார சேவைகள் பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் தொடர்ச்சியான தட்டுப்பாட்டால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மருத்துவமனைகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மையை சார்ந்து செயற்படுகின்றன.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் இருந்து பொருட்கள் குறைந்துவிட்டன. கடந்த எட்டு மாதங்களாக, குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடையாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அமைச்சகம் சில நேரங்களில் உதவுகிறது. பெரும்பாலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மயக்க மருந்து, இதய மற்றும் மனநல மருந்துகள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகமவிலுள்ள அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய்க்கான மருந்துகள் போதியளவில் இல்லை. இதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை தரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் அருணா ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நன்கொடைகளால் சமாளித்து வருகிறது. பெரும்பாலும் மாற்று மருந்துகளே பயன்படுத்தப்படுவதாகவும், சில சமயங்களில் நோயாளிகள் மருந்தகங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
புறநகர் மற்றும் மாகாண மருத்துவமனைகளில் நெருக்கடி மோசமாக உள்ளது. இந்தநிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் முக்கியமான அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். தேவை அதிகரித்துள்ளதே மருந்துகளின் பற்றாக்குறைக்கு காரணம் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கடன் வரி
இந்தியாவின் கடன் வரியைப் பயன்படுத்தி நிலைமை சமாளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மருத்துவமனைகளுக்கான கொள்முதல்களுக்கு பொறுப்பான அரச மருந்துக் கூட்டுத்தாபனம், கடன் வரியைப் பயன்படுத்துவதற்கான செயல்முறை நீண்டது மற்றும் கடினமானது மற்றும் சரியான நேரத்தில் கட்டளைகளை பெறுவதில் பெரும் தாமதங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.
2,000 க்கும் மேற்பட்ட கட்டளைகள், நான்கு வாரங்களுக்கு மேலாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாக அறியப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்படி, கடந்த சில வருடங்களில் 500 வைத்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
60 வயதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவால் மேலும் 800 மருத்துவர்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியேற உள்ளனர். ஏற்கனவே சுமார் 30 மருத்துவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து அரசு ஊழியர்களும் மருத்துவர்களும் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு அனுப்பியுள்ளது.
மேலும், அனுமதி பெற்றவர்களைத் தவிர, அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு விசாக்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று அனைத்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கை
இதற்கிடையில் அமெரிக்க தூதரகம் தமது நாட்டு பயணிகளுக்கு சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது சுகாதாரத் தகவல் என்ற தலைப்பின் கீழ் அதன் பயண ஆலோசனையின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில், நாடு முழுவதும் பயணம் செய்யும் போது பயணிகள் தங்கள் சொந்த மருந்துகளை எடுத்துச் செல்லுமாறு தூதரகம் கேட்டுள்ளது.
கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளதாகவும், கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் மூன்றில் மட்டுமே அவசர சேவைகள் உள்ளதாகவும் அமெரிக்க எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடுமையான மருத்துவப் பிரச்சனைகள் இருந்தால், தாய்லாந்து அல்லது சிங்கப்பூருக்கு போதுமான சிகிச்சைகள் கிடைக்கப்பெறும் இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பயணத்திற்கு முன், அவசர காலங்களில் மருத்துவ வெளியேற்றத்தை உள்ளடக்கிய
மருத்துவக் காப்பீட்டை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா தமது பயணிகளை
வலியுறுத்தியுள்ளது.