களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையின் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டாவது நாளாகவும் நேற்று பாடசாலை வாயிற் கதவு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையின் தேவையற்ற அறம் இல்லாத தலையீட்டினை உடன் நிறுத்துங்கள், எமது பாடசாலை ஒழுங்கான முறையில் இயங்குவதனை தடுக்காதே, வலயக்கல்வி அலுவலகத்தின் நீதியற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம், வலயக் கல்விப் பணிப்பாளரே நிதியற்ற நிருவாக தலையீட்டினை பாடசாலையின் மீது திணிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்கார்களான ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
முன்வைத்த கோரிக்கை
போராட்டம் இடம்பெற்றவேளை பாடசாலைக்கு அதிபர் மாத்திரமே சமூகம் கொடுத்திருந்த போதிலும் பாடசாலையில் கல்வி பயிலும் 3000 மாணவர்களையும் குறித்த அதிபர் மாத்திரமே நிருவகித்துள்ளார். எனினும் பாடசாலையில் எதுவித கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்த நிலையில் பின்னர் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் காரியாலயம் சென்று பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளும் அனைத்து விடயங்களையும் தான் செய்து வருவதாக வலயக்கல்விப் பணிப்பானர் சி.சிறிதரன தெரிவித்திருந்த நிலையில் வலயக் கல்விப் பணிப்பாளரின் கருத்துக்கள் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என்றும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க ஆர்ப்பாட்டம் நடாத்திய ஆசிரியர்கள் ஏற்று ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தகவல் தொழில் நுட்ப பாடத்திற்கான ஆசிரியரின் இடமாற்றத்தையும் வலயக் கல்விப் பணிப்பானர் இரத்துச் செய்து மீண்டும் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.