இலங்கை - இந்திய திட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விளக்கம்
இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார்ந்த ஒத்துழைப்புகள் இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள், செயலமர்வுகள் போன்ற திட்டங்கள் ஊடாக வலுப்பெற்றுள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சிறப்பு பயிற்சி
“வருடத்திற்கு இலங்கை பாதுகாப்பு படைகளின் 750பேருக்கு சிறப்பு பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கின்றன.
இருநாடுகளுக்குமிடையில் 2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாதுகாப்பு கலந்துரையாடலில், இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்கதாக்குவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போதே புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
இராஜதந்திர உறவு
இதன்பிரகாரம் ஏனைய நாடுகளுடன் இலங்கையின் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆழமாக மீளாய்வு செய்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியும் எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இருநாடுகளின் தேசிய கொள்கைகளுக்கோ அல்லது சட்ட கட்டமைப்பிற்கோ எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |